தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம், இரண்டாம் நிலை காவலர்களுக்கான 8,826 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 3.22 லட்சம் பேர் எழுதி அதில் 47 ஆயிரம் பேர் தேர்வாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்து, இன்னும் ஓரிரு நாள்களில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி, தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுப் பிரிவு ஃபார்ம் 3 சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
இந்த ஃபார்ம் 3 சான்றிதழானது பல்கலைக்கழகங்கள் மூலம் மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு வழங்கும் தேர்ச்சி சான்றிதழ் ஆகும். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்கள், தற்பொழுது நிராகரிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.