தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு ஆறாயிரத்து 545 பேரும், சிறைத்துறைக்கு ஏழு பெண்கள், 112 ஆண்கள் என 119 பேரும், தீயணைப்புத்துறைக்கு 458 ஆண்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 906 இரண்டாம் நிலை காவலர்கள் தேவைக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிட்டது.
இப்பணிகளுக்கு www.tnusrbonline.org என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். 5 லட்சத்து 50 ஆயிரத்து 314 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சென்னை உள்பட 37 மாவட்டங்களில் 499 தேர்வு மையங்களில் இன்று (டிச. 13) எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும், முகக்கவசம் இல்லாதவர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.