சென்னை : சென்னை தான் பாதுகாப்பான இடம் என நம்பி வந்த யூத குடும்பம் ஒன்றிற்கு அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது கடந்த ஜூன் மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம். சென்னை - பெசன்ட் நகரில் வசித்து வரும், யூத வம்சாவளியைச் சேர்ந்தவர், டேவிட் லீவி (42); கப்பற்பொறியாளர். இவரது வீட்டில் வாடகைக்கு இருந்த தமிழ்நாட்டின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் மகன் மற்றும் அரசியல்வாதியின் மகன் ஆகிய இருவரின் இடையூறுகளால், டேவிட்டின் குடும்பத்தை சென்னையை விட்டு வெளியேறும் முடிவை எடுக்கச் செய்திருக்கிறது.
கேட்டரிங் தொழில் நடத்துவதாகக்கூறி, டேவிட்டின் வீட்டை வாடகைக்கு எடுத்தித்திருந்த, பெரிய இடத்துப் பிள்ளைகள், அங்கே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதை அறிந்ததும், அவர்களிடம் வீட்டை காலி செய்யுமாறு டேவிட் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெரிய இடத்துப் பிள்ளைகள், டேவிட்டை மிரட்டி, ஆள் வைத்து அடித்துள்ளனர்.
இந்த அரசியல், அதிகார அராஜக செயலால், இந்திய குடியுரிமை பெற்றவரான டேவிட், குடும்பத்துடன், தங்களின் குடியுரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு, இந்தியாவிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளார். டேவிட், ஜெர்மன் செல்லத் தயாராகி வர, இவரது குடும்பத்தினர் ஏற்கெனவே அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் குடியேறிவிட்டனர்.
"அந்தத் தாக்குதலுக்கு பின்னர், என் மனைவியும் இரண்டு குழந்தைகளும் அமெரிக்க துணை தூதரகத்தில் தான் தங்கியிருந்தனர். தாக்கப்பட்டு தலையில் ரத்தம் வடியும் என்னுடைய காணொலி ஒன்று சமூக வலைதளத்தின் மூலம் உலகெங்கிலும் வாழும் யூதர்களின் பார்வையில் பட, அவர்கள் எங்களை இங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான நாட்டில் குடியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்" என தனது முடிவுக்கான காரணத்தை விவரிக்கும் டேவிட், "என் குடும்பத்தினர் தங்களின் இந்திய குடியுரிமையை விட்டுவிட்டு, பல்வேறு நாடுகளில் குடியேறிவிட்டனர். நான் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நானும் வெளியேறிவிடுவேன்" என்கிறார்.
யூத இனஅழித்தொழிப்பில் பாதிக்கப்பட்டப்பட்ட டேவிட்டின் முன்னோர்கள், அங்கிருந்து வெளியேறி சென்னைக்கு தஞ்சம் தேடி வந்துள்ளனர்.