இது குறித்து அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறுத்திவைக்கப்பட்ட 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இன்று முதல் 16ஆம் தேதி வரையிலும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 18 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-20ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளில் மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தற்போது பணியாற்றும் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
இந்த அரசாணையை எதிர்த்து ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான திருத்திய அரசாணையில் வழக்குத் தொடுத்தவர்களுக்கு மட்டும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவை பொதுவானதாக செய்வதுதான் நீதியின் பயன் அனைவருக்கும் கிடைப்பதற்கு வழிவகை செய்யும். மூன்றாண்டுகள் நிபந்தனை என்பது தவறானது என்பதை ஏற்றே நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. எனவே, அதன்பயன் அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைக்க பள்ளிக் கல்வித் துறை வழிவகை செய்வதுதான் சரியானதாக இருக்கும்.
மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் நீதிமன்றம் சென்று பல ஆயிரங்கள் பணம் செலவழித்தால்தான் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும் என்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல. மேலும் இதுபோன்ற செயல்களால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நீதிமன்றம் நோக்கி செல்லக்கூடிய நிலையை பள்ளிக் கல்வித் துறையே ஏற்படுத்துகிறது.
மேலும் திருத்தப்பட்ட அரசாணையில், முற்றிலும் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 40 விழுக்காடு மற்றும் அதற்குமேல் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் பெற்றவர்கள், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர், சிறுநீரக, இதய அறுவைச்சிகிச்சை செய்துகொண்டோர், புற்றுநோயாளிகள் ஆகியோருக்கும் மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் பலனை அந்தப் பிரிவினர் அனுபவிக்கமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
முதலில் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் இவர்களுக்கு விலக்கு வழங்கப்படாததால் மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியாத இந்தப் பிரிவினர் மாறுதல் விண்ணப்பங்களை அப்போது அளிக்க வில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி திருத்திய அரசாணை வெளியிடப்பட்ட பின்பும் இவர்களுக்கு புதிதாக விண்ணப்பம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதனால் நீதிமன்ற உத்தரவின்படி இவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வித் துறை உடனடியாகத் தவிர்ப்பு வழங்கப்பட்டுள்ள இந்தப் பிரிவினரிடமிருந்து புதிய மாறுதல் விண்ணப்பங்களைப் பெற்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
மேலும், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கலந்தாய்விலும், அதற்கு முன்பும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யப்பட்ட உபரி பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்தக் கலந்தாய்வில் ஒன்றியத்திற்குள் கலந்தாய்வு நடைபெற்று முடிந்தவுடன் ஏற்படும் காலிப்பணியிடங்களை அளித்து அவர்கள் சொந்த ஒன்றியத்திற்குள் வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதுபோன்ற குறைகளை சரிசெய்து ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் நியாயமான, நேர்மையான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.