தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு - குடிமைப் பணித் தேர்வு முடிவுகள்

181 பணியிடங்களுக்கான குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

tnpsc
tnpsc

By

Published : Dec 9, 2019, 5:17 PM IST

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் 1 (குரூப் 1 பணிகள்) 181 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பின்னர், மார்ச் 3ஆம் தேதி இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 438 விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வும் ஜூலை 12, 13,14 ஆகிய தேதிகளில் ஒன்பதாயிரத்து 442 விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், குருப் 1 அடங்கிய 181 காலிப்பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல், எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியலும் தேர்வாணைய இணையதளமான ’ www.tnpsc.gov.in ‘ இல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு வரும் 23 முதல் 31ஆம் தேதி வரை (25 மற்றும் 29 ந் தேதி நீங்கலாக) நடைபெறும்.

வரும் 27, 30 ஆகிய நாள்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் (திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை) சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மேலும், குருப் 1 தேர்விற்கு இனி நிலையான கால அட்டவணை பின்பற்றப்படும். அவ்வகையில்,

ஜனவரி மாதம் (முதல் வாரம்) – அறிவிக்கை வெளியீடு

ஏப்ரல் மாதம் – முதனிலைத் தேர்வு

மே மாதம் – முதனிலைத் தேர்வு முடிவுகள்

ஜூலை மாதம் – முதன்மை எழுத்துத் தேர்வு

நவம்பர் மாதம் - முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

டிசம்பர் மாதம் (முதல் வாரம்) – நேர்முகத் தேர்வு

டிசம்பர் மாதம் (இறுதி வாரம்) – கலந்தாய்வு / இறுதி முடிவுகள்

என்பதாக இருக்கும். மேலும், விரைவில் அனைத்துத் தேர்வுகளுக்கும் நிலையான கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க நிறுவனம் சார்பில் நீட் பயிற்சி' - செங்கோட்டையன் அடடே!

ABOUT THE AUTHOR

...view details