சென்னை:குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டு பேசும்போது, 'அதிக அளவில் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் குரூப் 4 தேர்வு 2019-க்குப் பிறகு நடைபெற உள்ளது. கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், நில அளவையர், இளநிலை உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 4 தேர்வுகள் நடைபெறாவிட்டாலும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் இருந்த காலிப்பணியிடங்களை ரிசர்வ் லிஸ்ட்டில் உள்ளவர்கள் மூலம் பூர்த்தி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடைபெறும். குறிப்பாக, அன்று காலை தேர்வு 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரத்திற்குத் தேர்வு நடைபெறும். மொத்தம் 7,301 பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து 81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவு மூலம் பூர்த்தி செய்யப்படும்.
200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். அக்டோபர் மாதம் முடிவுகள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும். குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்’ எனவும் தெரிவித்தார்.
தேர்வு நடைபெறும் பணியிட விவரங்கள்
- இளநிலை உதவியாளர் பிணையற்றது - 3593
- இளநிலை உதவியாளர் பிணை - 88
- வரித்தண்டாளர் - 50
- தட்டச்சர் - 2108
- சுருக்கெழுத்து தட்டச்சர் - 1024
- பண்டக காப்பாளர் ( ஊட்டி தமிழ்நாடு இல்லம்) - 1
- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- இளநிலை உதவியாளர் - 64
- வரித்தண்டாளர் - 49
- தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர் -7
- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
- இளநிலை உதவியாளர் - 43
முதல்முறையாக வாரியத்திற்கு 163 இடங்கள் நிரப்புவதற்கு தேர்வு நடத்தப்படுகிறது. 81 இடங்கள் விளையாட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு மொத்தம் 300 கேள்விகள் கேட்கப்படும் எனவும், முதல் 100 கேள்விகள் தமிழ்வழியில் இதுவரை படித்தவர்கள் பங்கேற்கும் வகையில் கேட்கப்படும் எனவும் கூறினார். அதனைத் தொடர்ந்து 200 கேள்விகள் பொது பாடப்பிரிவு மற்றும் பிற பிரிவு ( Aptitude ) கேள்விகள் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.