சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு 5 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், குரூப் 4 பணியிடத்திற்கான போட்டி எழுத்துத் தேர்வுகள் ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 7301 பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள, தேர்வுக்கு நேற்று(ஏப்ரல்.28) நள்ளிரவு வரை 21லட்சத்து 83 ஆயிரத்து 225பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப்-4 தேர்வு நடத்தப்படவில்லை.
இதன் காரணமாக இந்த ஆண்டு தேர்வு எழுதக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெறுவதற்காக போட்டித்தேர்வுகளில் அதிகளவில் ஆர்வம் செலுத்துவதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில் 7301 பணியிடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு 300 நபர்கள் போட்டியிடுகின்றனர். குரூப்-4 தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:6 முறை ஐஏஎஸ் தேர்வு - 5 முறை ஐஆர்எஸ் ஆக வெற்றி - சென்னை துறைமுக சுங்கத் துறை துணை ஆணையரின் நம்பிக்கை வழிகாட்டல்