2015ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, அத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென திருநங்கை ஸ்வப்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த முறைகேட்டை சிபிஐக்கு மாற்றக் கோரி திமுக அமைப்புச் செயாலாளர் ஆர்.எஸ். பாரதி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார்.
மேலும், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் 63 பேர் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் எனவும், இந்த முறைகேட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டாளருக்குத் தொடர்பு இருப்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.