சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன், ”குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து 75 நாள்களுக்குப் பின்னர் தேர்வு நடத்தப்படும். அதேபோல் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு 75 நாள் கழித்து தேர்வு நடத்தப்படும். இது தவிர 35க்கும் மேற்பட்ட தேர்வுகள் 2022ல் நடைபெற உள்ளது.
தேர்வின் விவரங்கள்
குரூப் 2, 2ஏ ஆகிய பணிகளில் 5831 காலி இடங்களும், குரூப் 4 பொறுத்தவரையில் 5255 காலி இடங்களும் உள்ளன. மேலும், தேர்வுக்கான கால அட்டவணை வெளியிட்ட பின்னர் துறையிலிருந்து காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கூடுதலாக வந்தால் அந்த இடங்களும் அறிவிப்பின் போது சேர்த்து வெளியிடப்படும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு குரூப் 4 காலியிடங்கள் 2000-லிருந்து 3000 கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.
தேர்விற்கான பாடத்திட்டங்கள்
இத்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் ஒரு வாரத்திற்குள் தயாராகிவிடும். அதனைத் தொடர்ந்து பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்படுவதோடு மாதிரி வினாத்தாள் வெளியிடப்படும். டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, இனி இதுபோன்ற தவறுகள் நடக்காதபடி பல்வேறு புதிய முறைகளை கொண்டு வந்துள்ளோம். உதாரணமாக ஓஎம்ஆர் (OMR) மற்றும் தேர்வர்களின் சுயவிவரங்களை தனியாக குறிப்பிட்டு, அதை பாதுகாப்பாக கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம். இதன் மூலம் சம்பந்தப்பட்டவரின் ஓஎம்ஆர் விடைத்தாளை எடுத்து திருத்த முடியாது. இது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது.
மதிப்பெண் கணக்கீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குரூப் 4 பொறுத்தவரையில் 40 மதிப்பெண்களுக்கு மேல் பெறப்பட்ட மதிப்பெண்கள் முழுவதும் பொதுப்பிரிவில் கணக்கிடப்படும். குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி விரிவான விடை எழுதுதல், கட்டுரை எழுதுதல் போன்ற முறைகளும் நடைமுறையில் இருக்கும் . தேர்வுக்கான பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், தேர்வு மாதிரி வினாத்தாள்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.