தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - இடைத்தரகர் ஜெயக்குமாரை காவலில் எடுத்த சிபிசிஐடி - இடைத்தரகர் ஜெயக்குமாரை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2A ஆகிய தேர்வுகளில் நடைபெற்ற முறைகேட்டில் தேடப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாரை வருகின்ற 13ஆம் தேதி வரை ஏழு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jeyakumar under custody
Jeyakumar under custody

By

Published : Feb 7, 2020, 5:06 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2A தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் பல தேர்வர்கள் இடைத்தரகர்கள் மூலம் பணம் செலுத்தி தேர்ச்சியடைந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள்தான் முறைகேட்டில் அதிகளவில் ஈடுபட்டிருப்பதாக குரூப்-4 தேர்வில் 99 பேரும், குரூப்-2A தேர்வில் 42 பேரும் முறைகேடு செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நடத்திய விசாரணை மூலம் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கக்கோரி டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் பரிந்துரைத்ததையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் தொடர்ந்து நடத்திவரும் விசாரணையில் இதுவரை குரூப்-4, குரூப்-2A தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த டிஎன்பிஎஸ்சி அலுவலர் ஓம்காந்தனை நீதிமன்ற காவலில் இருந்து ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவரை ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களுக்கு அழைத்துச் சென்று முறைகேடு எப்படி அரங்கேற்றப்பட்டது என்பதை வீடியோவாகப் பதிவு செய்து ஆதாரங்களைத் திரட்டிவருகின்றனர்.

இதே வேளையில் இந்த முறைகேட்டிற்கு மூளையாகச் செயல்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இதனிடையே நேற்று இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து மாஜிஸ்திரேட் கவுதமன் அவரை ஒருநாள் நீதிமன்ற காவலில் வைத்து இன்று எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமார், இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது மாஜிஸ்திரேட் பத்து நாள் போலீஸ் காவலில் செல்ல விருப்பமா என ஜெக்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், தனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை எனவும் தன்மீது பொய்யாக வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார். மேலும், போலீஸ் காவலுக்கு ஜெயக்குமாரை அனுமதிக்கக்கூடாது எனவும் ஜெயக்குமார் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்தது. அப்போது சிபிசிஐடி போலீசார் தரப்பில் ஜெயக்குமார் முக்கிய குற்றவாளி என்பதால் அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி நாகராஜன் ஜெயக்குமாருக்கு வரும் 13ஆம் தேதி வரை ஏழு நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.

இடைத்தரகர் ஜெயக்குமாரை காவலில் எடுத்த சிபிசிஐடியினர்

மேலும், ஜெயக்குமார் தரப்பில் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கக் கூடாது என அளிக்கப்பட்ட மனு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குடும்பத்தினர் அவரை சந்திப்பதற்கான அவகாசமும் வழங்கப்படவில்லை. ஜெயக்குமாருக்கு தேவையான மருத்துவ உதவிகள் மட்டும் சீராக வழங்கப்படவேண்டும் என மாஜிஸ்திரேட் நாகராஜன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு ஜெயக்குமார் அழைத்து செல்லப்பட்டு அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அலுவலகர் நாராயணன் இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டு ஆயுதப்படைக் காவலர் பூபதி மூலம் ஐந்து நபர்களிடம் 55 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று ஜெயக்குமாரிடம் கொடுத்து அவர்களை தேர்ச்சியடையச் செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் நாராயணனை பிடித்து இந்த முறைகேடு தொடர்பாக இன்னும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் ஜெயக்குமாருக்கும் அவருக்குமான தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகவும், பலர் அந்த முறைகேட்டில் ஈடுபட்டு பணியில் சேர்ந்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பாகவும் விசாரணையையும் சிபிசிஐடி கையிலெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கைப் போலவே 2016 - 2018 வரை நடைபெற்ற பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டிற்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details