2017ஆம் ஆண்டு நடந்த குரூப்-2 ஏ தேர்வில், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குரூப்-2 ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் 19 பேர், குரூப்-4 தேர்வில் 15 பேர், வி.ஏ.ஓ. தேர்வில் ஒருவர் என, மொத்தம் 35 நபர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குரூப்-2 ஏ, குரூப் 4 தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார், கடந்த 6ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன்பின், சிபிசிஐடி காவல் துறையினர் 7 நாள்கள் காவலில், எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று (பிப். 09) உத்தரவு பிறப்பித்தது. மேலும், சிறையில் உள்ள ஓம் காந்தனை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது ஜெயக்குமார், ஓம் காந்தன் இருவரையும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் உள்ள தேர்வு மையங்களுக்கு சிபிசிஐடி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு, தேர்வுத் தாளில் முறைகேடு செய்தது எப்படி என்பது குறித்து செயல்முறையாக செய்து காட்டினர்.
இந்நிலையில் ஓம் காந்தனிடம் நடத்திய விசாரணையில், சென்னை எண்ணூரைச் சேர்ந்த ஓட்டுநர்களான கார்த்திக்(39), செந்தில் குமார்(36), பெரம்பூரைச் சேர்ந்த சாபுதீன்(42) ஆகியோர் முறைகேடு செய்ய உதவி புரிந்தது தெரியவந்தது. மேலும், குரூப் 4 தேர்வு விடைத்தாளை ராமநாதபுரம் மையத்திலிருந்து சென்னைக்கு கொண்டுச் சென்றபோது, இவர்கள் மூவரும் ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனுக்கு தகவல் தெரிவித்ததும், அப்போது ஓம் காந்தனின் காரில் சென்ற ஜெயக்குமார், வாகன சோதனை நடைபெறுகிறதா என கண்காணித்து தகவல் கூறியதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, முறைகேட்டுக்கு உதவி புரிந்த ஓட்டுநர்கள் மூவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். அதுமட்டுமின்றி முறைகேட்டுக்குப் பயன்படுத்திய ஓம் காந்தன், கார்த்திக்கின் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததையடுத்து, சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், ஏற்கெனவே கிராம நிர்வாக அலுவலர்கள் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள படலையார் கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம்(29), பனையஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்ராஜ் (36) ஆகியோர் ஜெயக்குமாரிடம் தலா 7 லட்சம் ரூபாயை கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றது தெரியவந்ததால், இவர்கள் இருவரையும் சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்த நாள் விழா - சேவல் சண்டைக்கு அனுமதி கோரி மனு!