சென்னை:2006ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (Environmental Impact Assessment Notification)-யின் படி 20ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமானப்பணி தொடங்கும் முன்பு சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) பெற வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இன்று (செப்.13) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் 20ஆயிரம் ச.மீ. பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் (IT Parks) மற்றும் வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கட்டுமான உரிமையாளர்களும் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environmental Impact Assessment Authority –SEIAA)யிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்பு, கட்டுமானப் பணிகள் துவங்கும் முன்பு பிரிவு 25 நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் பிரிவு 21 காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981-ன் படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு இசைவாணை (Consent to Establish) வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். வாரியத்தின் இசைவாணை பெற்ற பின்பு, கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், நடைமுறையில், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரிவர பராமரித்து இயக்கப்படாமல், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அருகில் உள்ள வெள்ளநீர் வடிகால் கால்வாய்களிலும், காலி இடங்களிலும், நீர் நிலைகளிலும் வெளியேற்றப்படுவதாகப் புகார்கள் பெறப்படுகின்றன. மேலும் சில இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் கழிவுநீர் எடுத்துச் செல்லப்பட்டு சாலை ஓரங்கள், கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் விடப்படுவதாக புகார்கள் பெறப்படுகின்றன. சில குடியிருப்பு வளாகங்களில் திடக்கழிவு சரிவர மேலாண்மை செய்யாதது குறித்து புகார்கள் பெறப்படுகின்றன. இவ்வாறான செயல்பாடுகளினால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசு அடைகின்றது, மேலும் இந்நிகழ்வுகளை கண்டித்து தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுகின்றன.
எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சில அறிவிப்பினை வெளியிடுகின்றது. அவற்றின்படி,
* 20,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981-ன் கீழ் வாரியத்திடம் இயக்குவதற்கான இசைவாணை (Consent to Operate) பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே, வாரிய இசைவாணை பெற்று இருப்பின் அது புதுப்பிக்கப்பட்டு செல்லத்தக்கதாக (valid consent) இருக்க வேண்டும்.
* 20,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு கீழ் உள்ள கட்டடங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருப்பின், அவர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இசைவாணை பெறவேண்டும். இக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வாரியத்தால் கண்காணிக்கப்படும்.
* அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, குடியிருப்போர் நல சங்கத்திடம் ஒப்படைக்கப் பெற்று இருப்பின், அக்குடியிருப்போர் நல சங்கங்கள் வாரியத்திடம் விண்ணப்பித்து இசைவாணை பெற வேண்டும்.