தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்வாக சீர்திருத்தம் என்னும் பெயரில் பணியாளர்கள் குறைப்பு, தனியார் நிறுவன பராமரிப்பிற்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவருகிறது. அவை மத்திய அரசின் மின்சாரத் திருத்தச் சட்டத்தை மறைமுகமாக அமுல்படுத்துவது போல் உள்ளது என்று மின்துறை பொறியாளர்கள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
மத்திய அரசும், மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள கடனை அளிக்க பல்வேறு நிபந்தனைகளை வகுத்துவருகிறது. அதனை தமிழ்நாடு மின்சார வாரியமும் படிப்படியாக அமல்படுத்தி பணிகளை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் மின்சார வாரியத்தின் கடனுக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கியதுதான் காரணம் என்னும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு, "தமிழ்நாடு மின்சார வாரியம் 4 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிலிருந்து கடந்த 12 ஆண்டுகளில் 4035.5 கோடி யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளது.
அதன் மூலம் தனியார் நிறுவனங்கள் அடைந்த லாபம் ரூ.29 ஆயிரத்து 307 கோடி. தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திடமிருந்து மின்சாரம் வாங்குவதில் ஒரு யூனிட் மின்சாரம் சாம்பல்பட்டியில் ரூ.23.76 ரூபாய்க்கும், மதுரை பவர் நிறுவனத்தில் 26.17 ரூபாய்க்கும், பிள்ளைபெருமாநல்லூர் மின்சார உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து 21.80 ரூபாய்க்கும் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான விலையில் வேறுபாடுகள் உள்ளன” என குற்றம் சாட்டுகின்றனர்.