சென்னை:பொறியியல் மாணவர் சேர்க்கையில், மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் என்பது தரவரிசையை நிர்ணயம் செய்து, மாணவர்களுக்கு சிறந்தக் கல்லூரிகளில் விரும்பியப் பாடத்தினை தேர்வு செய்வதில் முக்கியப் பங்கை வகிக்கிறது.
10ஆம் வகுப்பு மதிப்பெண்
கடந்த 2020-21ஆம் கல்வியாண்டில், கரோனா தொற்றால் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பொறியியல் சேர்க்கையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. குறிப்பாக, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு முடிவுகள் தான் கணக்கில் எடுக்கப்படவிருக்கிறது.
இந்த 2019ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இதனால், நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் 'கட்- ஆஃப்' எனப்படும் தரவரிசை மதிப்பெண் கணிசமாக அதிகரிக்கும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்-ஆஃப் அதிகரிக்க காரணம்
கடந்த 2018-19ஆம் கல்வியாண்டில் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், பெரும்பாலான மாணவர்கள் 451 மதிப்பெண்களுக்கும் கூடுதலாகப் பெற்றுள்ளனர். இதுவே தரவரிசை மதிப்பெண் உயர்வதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, 10 ஆம் வகுப்பு தேர்வில் 481க்கும் அதிகமான மதிப்பெண்களை 9 ஆயிரத்து 402 மாணவர்களும், 451 - 480 மதிப்பெண்கள் வரையில், 56 ஆயிரத்து 837 மாணவர்களும், 451 மதிப்பெண்களுக்கு கூடுதலாக, 66 ஆயிரத்து 239 மாணவர்கள் பெற்றிருக்கின்றனர்.