நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்திப் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மதநல்லிணக்க வழிபாட்டுத் தலமாக விளங்கும் இந்த தர்காவில், நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகசந்தனக்கூடு ஊர்வலம் திகழ்கிறது. நாகையில் இருந்து இந்த சந்தனக்கூடு புறப்பட்டு பிப்ரவரி 5ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைகிறது. பின்னர் நாகூர் தர்காவில் பாத்தியா ஓதி நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும் இந்த நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொள்கிறார்கள். அனைத்து மதத்தினரும் வழிபடும் நாகூர் தர்காவில் நடைபெறும் கந்தூரி விழாவுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சுற்றுலா பிப்ரவரி 4ஆம் தேதி காலை 7 மணிக்கு சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து தொடங்கி பிப்ரவரி 6ஆம் தேதி காலை சென்னையில் நிறைவுபெறுகிறது. இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்துள்ள நாகூர் சுற்றுலாவுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் பயன்படுத்தப்படும் குளிர்சாதன வசதியுள்ள சொகுசு பேருந்து இயக்கப்படும்.