மா. சுப்பிரமணியன் இன்று (ஆகஸ்ட் 24) ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவரும் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை ஆய்வுசெய்தார். அத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தைத் தொடங்கிவைத்தார். இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர், "ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் 56 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களில், 98.3 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக, இந்த மருத்துவமனையில்தான் 15 லட்சத்து 74 ஆயிரம் பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மொத்தம் 4,200 பேர் கறுப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,200 பேர் இந்த மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 200 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் 24 மணி நேரமும் தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கை 55
மாநிலம் முழுவதும் மொத்தம் 55 அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில்24 மணி நேரமும் தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டுவருகின்றன. இதுவரை மொத்தம் இரண்டு கோடியே 80 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று (ஆகஸ்ட் 23) ஒரேநாளில் மட்டும் நான்கு லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையே ஒருநாளில் செலுத்தப்பட்டதில் அதிகபட்சம். இருப்பினும், தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் ஐந்து லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். தற்போது எட்டு லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. வெளிமாநிலத்திலிருந்து இன்று ஐந்து லட்சம் தடுப்பூசிகள் சென்னை வருகின்றன" எனத் தெரிவித்தார்.
அந்த வகையில், புனேவிலிருந்து விமானம் மூலம் 42 பார்சல்களில் ஐந்து லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இந்தத் தடுப்பூசிகள் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டன.
இதையும் படிங்க:11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? - மா.சு பதில்