தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த பொதுத்தேர்வினை நடத்தும் முழு பொறுப்பும் மாவட்டக் கல்வி அலுவலர்களைச் சேரும்.
தேர்வுப் பணிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேர்வு பணி நியமனம் விதிமுறைக்கு புறம்பாக இருக்கிறா? என்று கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள நடைமுறை வழிகாட்டலில் கூறப்பட்டுள்ளதாவது:-
பணி விதிமுறை
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது மாவட்டத்தில் எந்தவொரு தேர்வுப் பணி நியமனமும் விதிமுறைகளுக்குப் புறம்பாக இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமான ஆணைகள் வழியாக மட்டுமே நியமனங்கள் செய்யப்பட வேண்டும்.
கண்டிப்பாக வாய்மொழி ஆணைகள் வழங்கக் கூடாது. மேலும் மாற்று ஆணை வழங்கும்போது சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாக தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் தேர்வு மையங்களையும் பார்வையிட வேண்டும்.
முதன்மை கண்காணிப்பாளர் நியமனம்
அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்வர்கள், தேர்வுப் பணியாளர்களது உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய அமைப்புகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களை முதன்மைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்தல் கூடாது. எட்டு கிலோ மீட்டர் தூரம் மிகாமல் உள்ள பிற அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களை, அரசுப் பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டும்.
தேர்வு அலுவலர் நியமனம்
எந்தக் காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களையோ, துணை முதல்வர்களையோ, ஆசிரியர்களையோ எந்த தேர்வுமையத்திற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்தல் கூடாது. தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களையோ அல்லது அரசுப் பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களையோ தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்து கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களை துறை அலுவலராக நியமனம் செய்யப்படவேண்டும். தேவைப்படும் இடங்களில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களைத்துறை அலுவலராக நியமனம் செய்து கொள்ளலாம். ஒரு தேர்வு மையத்திற்கு நியமிக்கப்படும் முதன்மைக் கண்காணிப்பாளரும், துறை அலுவலர்களும் வெவ்வேறுபள்ளிகளைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருத்தல் கூடாது.
கூடுதல் தேர்வர்கள் பயன்பாடு
கடந்தாண்டு தேர்வுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவருக்கு இந்தாண்டும் அதே பணியை ஒதுக்கீடு செய்யப்படக் கூடாது. ஒரு தேர்வு மையத்தில் தேர்வர்களின் எண்ணிக்கை 400க்கு மேல் இருந்தால், ஒவ்வொரு 400 தேர்வர்களுக்கும் ஒரு கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் ஒருகூடுதல் துறை அலுவலர் நியமனம் செய்யப்பட வேண்டும்.