சென்னை: பொங்கலுக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கேட்கப்படும் கருத்தின் அடிப்படையில் வரும் ஜனவரி 18ஆம் தேதி முதல் 10 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொங்கலுக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்றும்(ஜனவரி 6) நாளையும்(ஜனவரி 7) தமிழ்நாடு முழுவதும் 12ஆயிரம் பள்ளிகளில் நடைபெறுகிறது.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் இந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து, தங்களின் கருத்துகளை படிவங்களில் பூர்த்திசெய்து அளித்துள்ளனர்.
பொங்கலுக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பு - பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு - தமிழ்நாடு அப்டேட்ஸ்
10:25 January 06
தலைமையாசிரியர்கள் அந்த கருத்துகளைத் தொகுத்து பள்ளிக்கல்வித்துறைக்கு நாளை(ஜன.07) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க உள்ளனர். அதனடிப்படையில் தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் முதலில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், வரும் 18ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கடந்த 9 மாதங்களாக தங்களின் குழந்தைகள் ஆன்லைன் மூலம் படித்தாலும் ஆசிரியர்களிடம் நேரில் கற்கும் அனுபவத்தைப் பெறவில்லை. எனவே, பள்ளிகளைத் திறக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தையும் அரசு வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் புத்தாண்டின் தொடக்கத்தில் வரலாறு காணாத மழை!