சென்னை உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் மீதான தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் வெங்கடாசலம் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளா் பிரதீப் யாதவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'தமிழ்நாட்டில் ஒரு முறைப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களான தட்டு, பிளாஸ்டிக் டம்ளர், கப், பிளாஸ்டிக் கொடி, வாட்டர் பாக்கெட் உள்ளிட்ட பொருட்களுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் 250 லிட்டா் கொள்ளளவு உடைய இரண்டு குப்பைத் தொட்டிகளை வைத்து நெகிழிக் கழிவுகளை சேகரிக்க வேண்டும். நெகிழி, மின்னணு திடக் கழிவுகளை மாணவா்கள் சேகரித்து தங்கள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போட வேண்டும்.