தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரை சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவினை மாணவர்கள் விரும்பி உண்ணும் வகையிலும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சத்தான உணவுடன் மேலும் அவர்களுக்கு சத்தினை அதிகரிக்கும் வகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மதிய உணவுத் திட்டத்தில் சில மாற்றங்களை அறிவித்தார்.
அதன்படி கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, கறுப்புக் கொண்டை கடலை, தக்காளி, கருவேப்பிலை, கீரை உள்ளிட்ட சாதங்கள் எனப் பல வகையான சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமூக நல ஆணையர் ஆபிரகாம் சத்துணவுத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்யலாமா? என்பது குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் கருத்து கேட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பேயத்தேவன் கூறியதாவது, "சத்துணவுத் திட்டம் 1982ஆம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவுத் திட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அதேபோல் ஓய்வூதியத் தொகையை ஒன்பதாயிரம் ரூபாயாக வழங்கவும், மேலும் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த உள்ளோம்.
சத்துணவுத் திட்டத்தில் புதிய வகை உணவுத் திட்டம் 2014ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு, உணவு செலவு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அப்போது வழங்கிய உணவு மானியத்தை மட்டுமே தற்போது வழங்கி வருகிறார்கள். ஒரு மாணவருக்கு புதிய வகை கலவை சாதங்கள் வழங்குவதற்கு உணவு மானியத்தை ஐந்து ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சத்துணவுத்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உணவு மானியம் உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் உணவு மானியத்தை உயர்த்தி வழங்குவதற்காக 98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.