தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீனர்களுக்கு நம்மாழ்வார் குரு - மலேசியசமூக ஆர்வலர் சுப்பாராவ் சிறப்புப் பேட்டி - மலேசிய பினாங்கு

சென்னை: தமிழர்களின் பாரம்பரியமான இயற்கை வேளாண்மை முறைக்கு மலேசியாவில் உள்ள சீன விவசாயிகள் மாறி வருகின்றனர் எனவும் அவர்கள் நம்மாழ்வாரை குருவாக கொண்டு வழிபடுகின்றனர் என்றும் மலேசியாவிலுள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் இயக்குனர் சுப்பாராவ் ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.

சுப்பாராவ்

By

Published : Aug 31, 2019, 7:37 PM IST

இதுகுறித்து அவர் பேசுகையில், ”மலேசியாவில் அண்மைக் காலமாக ரசாயன முறை வேளாண்மையில் இருந்து வெளியேறி பாரம்பரிய வேளாண்மைக்கு அங்குள்ள விவசாயிகள் தங்களைத் தயார்படுத்திவருகின்றனர். இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை குறித்து மிகப் பரவலான மாற்றம் மலேசியா முழுவதும் எதிரொலித்துவருகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோடு தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்துக்கொண்ட 1,500க்கும் மேற்பட்ட சீன விவசாயிகள் தமிழர்களின் பாரம்பரிய இயற்கை வேளாண்மையை பின்பற்றி தங்களது வேளாண் தொழிலை மேற்கொள்கின்றனர்.

இயற்கை விவசாயம்

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 600 பேர் தமிழ்நாட்டிற்கு வந்து இயற்கை வேளாண்மை குறித்து இங்குள்ள வல்லுநர்களிடம் பயிற்சி பெற்றுசெல்கின்றனர். குறிப்பாக நம்மாழ்வாரின் சொற்பொழிவுகளை, நூல்களைப் பயின்று அதனை பின்பற்றுகின்றனர். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நம்மாழ்வாரின் நூல்களை சீன மொழியில் வெளியிட்டு ஊக்குவித்து வருகிறது. நம்மாழ்வாரை தங்களது வேளாண்மை குருவாக ஏற்றுக்கொண்டு அவர்கள் வழிபடுகின்றனர்

இதன் காரணமாக ரசாயன முறை வேளாண்மையில் இருந்து தங்களை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக்கொண்டு பாரம்பரியமான தமிழர்களின் இயற்கை வேளாண்மை முறைக்கு மாறிவருகின்றனர். இவர்களில் சீனர்கள் முன்னணியில் உள்ளனர்” என்றார்.

நம்மாழ்வார்

தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு பணிநிமித்தமாக வரும் தொழிலாளர்கள் அங்கு படுகின்ற இன்னல்கள் குறித்து கேட்ட கேள்விக்கு, ’இந்த சிக்கல் நெடுநாட்களாக மலேசியாவில் இருக்கிறது. இதற்கு காரணம் தவறான முகவர்களை நம்பி தமிழ்நாட்டு தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வருவதுதான். இதுகுறித்த விழிப்புணர்வை நாங்கள் ஏற்படுத்திவருகிறோம். அண்மைக் காலமாக மலேசியாவில் ஒரு சில நபர்களால் விற்பனை செய்யப்படும் மலிவு விலை சாராயத்தை உட்கொண்டு மடிந்து போகின்ற நிலையும் உள்ளது.

நம்மாழ்வாரிடம் பயிற்சி

அண்மையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த மலிவு விலை சாராயத்தை அருந்தி உயிரிழந்துவிட்டனர். மேலும் 4 நேபாளிகளும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுகுறித்து தமிழ்நாடு அரசோ அல்லது மலேசியாவில் உள்ள இந்திய தூதரகமோ எந்தவித அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை. தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற, பணியாற்றுகின்ற பகுதிகளுக்குச் சென்று இந்த மலிவு விலை சாராயத்தால் ஏற்படுகின்ற கேடு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். அதேபோன்று இங்கே தவறான முதலாளிகளிடம் மாட்டிக்கொண்டு அடிமை போன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிறைய தொழிலாளர்களை நாங்கள் மீட்டெடுத்து தாய்த் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவருகிறோம்’ என்றார்.

சுப்பாராவ் சிறப்புப் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details