திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி எடையூர் கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையத்தில் வாக்குச் சீட்டில் சில சின்னங்களில் ஏற்கனவே மை அச்சிடப்பட்டு வந்துள்ளதாலும் மேலும் வாக்குச் சீட்டு தரம் குறைவாக உள்ள காரணத்தால் வாக்கு மை பின்புறமும் தெரிகிறது போன்ற காரணங்களால் வாக்குப்பதிவு இரண்டு மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் வாக்களித்தவர்களின் வாக்குச் சீட்டின் பின்பக்கத்தில் அலுவலர்கள் கையெழுத்திட்டும் மாற்று வாக்குச்சீட்டுகளை வழங்கிய பின்னர் தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே புத்தேரி ஊராட்சியில் உள்ள மூன்று வார்டு பூத்களில்
ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிப்பவர்களை கண்டறிந்து, அவர்களிடம் வாக்குச் சீட்டை மாற்றி கொடுத்து வாக்குகளை செல்லாத ஓட்டுகளாக மாற்றும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வந்ததாகக் கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி
தருமபுரி மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சியில் இளைஞர் ஒருவருக்கு தான் வாக்களிக்க நினைத்த சின்னம் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் வாக்குப்பதிவை நிறுத்திவைத்து சிலர் அந்த வாக்குச்சாவடியை முற்றுகையிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து வாக்குச் சீட்டை சோதனை செய்து பார்த்ததில் அதில் 7 சீட்டுகளில் சின்னம் மாறி இருந்தது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அந்த வாக்காளரிடம் தேர்தல் அலுவலர் பேசி பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.