சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகியவற்றின் மத்திய உளவுத் துறை கூடுதல் இயக்குநராகத் தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலரான டி.வி. ரவிச்சந்திரனை மத்திய அரசு அறிவித்துள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பணியாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.
1990 பேட்ஜ் ஐபிஎஸ் அலுவலரான டி.வி. ரவிச்சந்திரன், ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்டு, சென்னையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். ரவிச்சந்திரன் கடலூர் எஸ்.பி., கியூ பிரிவு எஸ்.பி., லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி. எனப் பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், 2000ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணியில் ரவிச்சந்திரன் இருந்துவருகிறார். குறிப்பாக ஜெர்மனி நாட்டின் இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு அலுவலராகவும், மத்திய உளவுத் துறை இணை இயக்குநராகவும், டெல்லி மத்திய உளவுத் துறை தலைமை அலுவலகம் என கடந்த 20 ஆண்டுகளாக ரவிச்சந்திரன் மத்திய அரசுப் பணியில் பணியாற்றியவர்.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் ரவிச்சந்திரன் ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றார். நேர்மையான அலுவலர் எனப் பெயரெடுத்துள்ள ரவிச்சந்திரன் மத்திய உளவுத் துறையில் அதிக அனுபவம் பெற்றிருப்பதால், உயரிய பொறுப்பாகப் பார்க்கக்கூடிய மத்திய உளவுத் துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:Covid-19 Vaccine Update: தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் இவ்வளவா?