தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசிய உயர் கல்வித் தகுதிகள் கட்டமைப்பு நீட் தேர்வை விட கொடுமையானது - பொன்முடி - தேசிய கல்வி கொள்கை

ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த விரும்பும் வரைவு தேசிய உயர் கல்வித் தகுதிகள் கட்டமைப்பு என்ற புதிய முறை, நீட் தேர்வு முறையை விட கொடுமையானது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொன்முடி
பொன்முடி

By

Published : Feb 23, 2022, 12:40 PM IST

சென்னை: வரைவு தேசிய உயர் கல்வித் தகுதிகள் கட்டமைப்பு குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தேசிய கல்விக் கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப்பாடு கோரும் ஒன்றிய அரசின் மின்னஞ்சல் தமிழ்நாடு அரசால் பிப். 18ஆம் தேதி பெறப்பட்டது.

இதுகுறித்து கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்தினை பெற்று விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு அரசிற்கு குறைந்த கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, வரைவு செயலாக்கத் திட்டம் (Draft Implementation Plan) குறித்து ஆய்வு செய்து, அரசின் நிலைப்பாடு விரைவில் அனுப்பப்படும்.

கல்வி மறுப்பு

தேசியக் கல்விக் கொள்கை, 'அனைவருக்கும் கல்வி' என்ற தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சீரிய தலைமையில் நடைபெறும் தமிழ்நாடு அரசு, அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
பட்டப்படிப்பு பயில முதநிலைத் தகுதிகளை (Entry requirements) மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டுமென்று இவ்வரைவு கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு ஏற்புடையதல்ல.

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் நுழைய (பயில) நுழைவுத்தேர்வு தடையாக இருந்த காரணத்தால், அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் ரத்துசெய்யப்பட்டது. இலவசக்கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, தேவையான அளவு கல்லூரிகளும், அவற்றில் போதுமான அளவு வேலைவாய்ப்பிற்கேற்ற பாடப்பிரிவுகளும் அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட சமூகநீதி உத்தரவுகளால் அனைத்து தரப்பு மாணவர்களுக்குமான கல்வி என்பது தமிழ்நாடு அரசால் உறுதிப்படுத்தப்பட்டது.

அதுபோல, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயில நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பதை திமுக தொடர்ந்து கண்டித்து வருகிறது. ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்படும் இந்நடவடிக்கை கட்டாயமாக தடுக்கப்பட வேண்டும். எனவே, தற்போதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையை மாற்றக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும்.

இடை நிற்றலை ஊக்குவிக்கும்

ஆனால், தற்போதைய தேசிய கல்விக் கொள்கையின்படி மூன்றாண்டு பட்டப்படிப்பில் முதலாண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், இரண்டாமாண்டில் நிறுத்தினால் பட்டயம், மூன்றாமாண்டு முடித்தால் பட்டம் போன்றவை இடைநிற்றலை ஊக்குவிக்க செய்யுமென்பதால் அதனை தமிழ்நாடு அரசு வன்மையாக எதிர்க்கிறது.

மேலும், மூன்றாண்டு இளநிலைப் பட்டப்படிப்பே தமிழ்நாடு அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கையில் இந்த உயர்கல்வி வரைவுத் திட்டம் நான்காண்டு இளநிலைப் பட்டத்தை பரிந்துரைக்கிறது.

இது மாணவர்களின் கல்வி பயிலும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கிறது. மற்றொருபுறம், முதல் மூன்றாண்டுகளில் சராசரி ஒட்டுமொத்த தரப்புள்ளி (CGPA) 7.5-க்கும் குறைவாக பெற்றிருப்போர் நான்காமாண்டு செல்ல இயலாது என்பது இயற்கை நீதிக்கு புறம்பானதாகும். இதுவும் தமிழ்நாடு அரசின் கல்வி கொள்கைக்கு முரணானதாகும்.

மேற்கண்ட வரைவுக் கொள்கையின்படி, ஒரு பருவத்தின் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சியுறாத மாணவர்கள் அடுத்த பருவத்தில் அனுமதிக்கப்படாமல் தற்காலிக இடைநிறுத்தம் (Break System) செய்யப்பட்டால், மாணவர்களின் கற்கும் காலம் (Duration of Study) நீட்டிக்கப்படுவதுடன் அவர்களுடைய பயிலும் ஆர்வம் குறைந்து இடைநிற்றல் அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு அதனை எதிர்க்கிறது.

கல்வி அமைப்பு சீர்குலையும்

ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த விரும்பும் புதிய முறை, நீட் தேர்வு முறையை விட கொடுமையானது. இது மாணவர்களை கல்விக் கூடங்களிலிருந்து வெளியேற்ற வகை செய்யும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே சீர்குலைக்கும் செயல்.

ஏழை, எளிய விளிம்புநிலை மாணவர்களின் நலனுக்கு எதிரானது. மேலும், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கென குழு ஒன்று அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தர்மபுரியில் திமுக அப்ப வாஷ்-அவுட் - இப்போ கிளீன் ஸ்வீப்: மகிழ்ச்சியில் எம்ஆர்கே

ABOUT THE AUTHOR

...view details