தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணையில் மாற்றம் செய்து உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் 2018 டிசம்பர் 28ஆம் தேதியன்று அரசாணை வெளியிட்டார்.
இதனை ஏற்க முடியாது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அரசிற்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், 2019 ஏப்ரல் 24 ஆம் தேதி புதிதாக மீண்டும் ஒரு அரசாணையை உயர் கல்வித் துறை செயலர் மங்கத் ராம்சர்மா வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விதிகள் 2007இல் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் இளங்கலை பொறியியல் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புக் குழு மாற்றி அமைக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்குழுவின் தலைவராக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், உறுப்பினர் செயலராக கோயம்புத்துார் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் புருஷோத்தமன் செயல்படுவார் என அதில் கூறப்பட்டுள்ளது.