காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது. அப்படி அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீர் வரத்து குறையும் என அத்திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இருப்பினும், மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது விவகாரம்... தமிழ்நாடு அரசு முடிவு
சென்னை: மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது, என்பதை காவிரி ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.
இதற்கிடையே, சமீபத்தில் தமிழ்நாடு வந்த கர்நாடக அமைச்சர், ‘தற்போது கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது. எனவே தண்ணீரை திறந்துவிட இயலாது. மழை பெய்தால் பார்ப்போம்’ என கூறிவிட்டுச் சென்றார். அவரது இந்தப் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் மசூத் உசேன் தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது, என்பதை வலியுறுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும், தமிழ்நாட்டுக்கான ஜூன் மாத காவிரி நீர் 9.19 டி.எம்.சி.யை கர்நாடகா திறந்து விடவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட இருக்கிறது.