சென்னை:புரெவி புயல் எதிரொலி காரணமாக, தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கு நாளை(டிச.4) பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புரெவி புயல் எதிரொலி ஆறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை
19:05 December 03
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்," வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த “புரெவி புயல்” இன்று (டிச.3), மன்னார் வளைகுடா பகுதியில், பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.
இப்புயல், டிசம்பர் 4 ஆம் தேதியன்று அதிகாலையில் பாம்பன் -கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது, பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (டிச.4) அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதற்கு ஈடாக, அடுத்தாண்டு(2021) ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும். மேற்கூறிய மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொது மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.