சென்னை:தமிழ்நாட்டின் ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ராஜ்பவன் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் செய்தி வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஏப்ரல் 20.2022 அன்று வெளியிடப்பட்ட சென்னை பதிப்பகத்தில் முதல் பக்கத்தில் "Spike in blackbuck deaths in Raj Bhavan, 20 in 5 months" என்ற தலைப்பின்கீழ் வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது மற்றும் சரியான தகவல்கள் சேகரிக்கப்படாமலும், ராஜ்பவனுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்த மான்கள்-எண்ணிக்கை குறைவு: ராஜ்பவனில் இருக்கும் பிளாக்பக் மான் வகைகளில் 5 மாதத்தில் 20 மான்கள் இறந்ததாகக் கூறப்படும் எண்ணிக்கை முற்றிலும் தவறானது. மேலும் இது போன்ற வன விலங்கு உயிரிழப்பு இயல்பாக வனப்பகுதியில் நடக்கும் என்றும், வனத்துறையினர் உறுதி செய்த இறப்புகள் உங்கள் செய்தியில் குறிப்பிட்டதை விட குறைவானதுதான் என ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. மேலும் நட்சத்திர கார்டன் பகுதியில் உள்ள புற்கள் மெக்சிகன் ரக செயற்கை புற்களாக மாற்றப்பட்டுள்ளன எனவும், இந்த புற்களை உண்பதாலேயே மான்கள் இறப்பதாகக் குறிப்பிட்டு இருப்பதும் தவறு. நட்சத்திர கார்டன் பகுதியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அவை வழக்கமான மான்கள் மேயக்கூடிய நிலமாகத்தான் உள்ளது என ஆளுநர் மாளிகை விளக்கியுள்ளது.
இது மேய்ச்சல் நிலம் அல்ல:ராஜ்பவனின் மெயின் லான் எனப்படும் அறை வெளிப்புறத்தில் பொது மக்கள் காணும் வகையில் அமைந்துள்ளது. ராஜ் பவனின் அனைத்து நிகழ்ச்சிகளும் இங்குதான் நடைபெற்று வருகிறது. "வரவேற்பு", "சத்தியப் பிரமாணம்" "பொங்கல் வரவேற்பு" உள்ளிட்ட ராஜ்பவனின் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் இந்த இடத்தில்தான் நடைபெறும். இங்கு இருக்கும் புல்வெளி தோட்டக்கலைத்துறையால் புதுப்பிக்கப்படும். முன்னதாக நவம்பர்-2021இல் புதுப்பிக்கப்பட்டது. இங்கு உள்ள புல்வெளி விலங்குகளுக்கான மேய்ச்சல் நிலம் இல்லை.