தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எழுவர் விடுதலை: நளினி தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்யக்கோரும் அரசு - இன்று விசாரணை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுதலை செய்யும் தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல்செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நளினி தொடர்ந்த மனு, Nalini petition on premature petition
நளினி தொடர்ந்த மனு

By

Published : Nov 29, 2021, 9:12 AM IST

சென்னை:முன்னாள் பிரதமர்ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது.

இதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்துவைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.

முந்தைய மனுக்கள்

இந்த மனுவுக்குப் பதிலளித்து, தமிழ்நாடு உள் துறை சார்பில் அதன் இணைச் செயலர் பத்மநாபன் மனு தாக்கல்செய்துள்ளார். அதில், தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி ஏற்கனவே தாக்கல்செய்த வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி நளினி தாக்கல்செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று விசாரணை

மேலும், அமைச்சரவைத் தீர்மானம் தொடர்பாகப் பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கில், மத்திய உள் துறை அமைச்சகம் தாக்கல்செய்த பதில் மனுவில், தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்கத் தகுதியானவர் எனக் கூறி, ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்ததாகவும், அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் எனக் கூறியிருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதால் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று (நவம்பர் 29) விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: தன்னை விடுவிக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details