தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'வருது வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை அவசியம்' - pmk

வடகிழக்குப் பருவமழை அதிகரித்துவரும் நிலையில் வெள்ள இடரைத் தடுக்க தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை, ராமதாஸ், RAMADOSS
வடகிழக்குப் பருவமழை

By

Published : Oct 18, 2021, 2:27 PM IST

சென்னை:இது குறித்து அவர் இன்று (அக்டோபர் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழையால் அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளம், அதன் விளைவுகளை வைத்துப் பார்க்கும்போது, அதே போன்ற நிலைமை சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மழை பெறும் பகுதிகளில் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சமும், கவலையும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

நீளூம் தென்மேற்குப் பருவமழை

நடப்பாண்டில் தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தொடக்கம் முதலே இயல்பை விட அதிகமாக பெய்து வருகிறது. அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலேயே தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வந்து, வடகிழக்குப் பருவமழைத் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை இன்னும் தீவிரமாக பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தை வைத்துப் பார்க்கும்போதும், கடந்த சில வாரங்களில் வங்கக்கடலில் நான்குக்கும் மேற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதை வைத்துப் பார்க்கும் போதும் நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விட கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை மனதில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அதிகரிக்கும் வெள்ள அபாயம்

வடகிழக்குப் பருவமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்குவது, தாழ்வானப் பகுதிகளை வெள்ளம் சூழ்வது போன்றவை வழக்கமாக நிகழும் நிகழ்வுகள் தான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சென்னை, அதன் புறநகர் மாவட்டங்களிலும், கடலூர் உள்ளிட்ட பிற வட மாவட்டங்களிலும், காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

கடந்த 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் இந்த மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளமும், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும் மக்களின் மனதில் நீங்காமல் நிறைந்து வாட்டிக் கொண்டிருக்கின்றன. அதே போன்ற நிலைமை மீண்டும் ஒருமுறை ஏற்பட்டு விடக்கூடாது என்று மக்கள் வேண்டுகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களிலும், சில வாரங்களுக்கு முன்பாக நாமக்கல் மாவட்டத்திலும் ஏற்பட்ட வெள்ளம் மக்களின் வெள்ள அச்சத்தை அதிமாக்கியிருக்கிறது.

மக்களின் இந்த அச்சத்தை தேவையற்றது என்று புறந்தள்ளி விட முடியாது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் நன்மையைச் செய்யும் ஏரிகள்தான் பல நேரங்களில் வெள்ளப் பெருக்குக்கு காரணமாக உள்ளன.

சென்னை தாங்காது...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி, புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, தேர்வாய்க்கண்டிகை ஏரி ஆகிய 5 நீர்த் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவான 11.757 டி.எம்.சியில், இன்றைய நிலவரப்படி 9.64 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அதாவது நான்கு ஏரிகளும் சராசரியாக 82% நிரம்பியுள்ளன.

பூண்டி, தேர்வாய்க் கண்டிகை ஆகிய ஏரிகள் கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டிவிட்ட நிலையில் எந்த நேரமும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளன. மற்ற ஏரிகள் நிரம்புவதற்கு இன்னும் 3 அடி மட்டுமே நீர் மட்டம் உயர வேண்டும். நிலைமை சமாளிப்பதற்காக இந்த ஏரிகளுக்கு வினாடிக்கு 867 கன அடி தண்ணீர் வரும் நிலையில், 934 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தில் இயல்பாகவே அதிக மழை பெய்யும். தமிழ்நாடு எல்லையை ஒட்டிய ஆந்திராவிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அதனால், பாலாற்றில் இப்போதே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் இப்போது பெய்வது போன்ற மழை ஒரு நாள் பெய்தால் கூட, இந்த நேர்த்தேக்கங்களுக்கு வரும் தண்ணீரை அப்படியே திறந்து விட வேண்டியிருக்கும் என்பதால், அந்த வெள்ளத்தை சென்னை தாங்குமா? என்பது தெரியவில்லை.

அலுவலர்களுக்கு அதிகாரமளிக்கவும்

வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைகளை நடத்தியிருப்பது மட்டுமின்றி, வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் சென்றும் ஆய்வு செய்திருக்கிறார்.

ஆனால், வட கிழக்குப் பருவ மழை எந்த நேரமும் தொடங்கலாம் என்ற நிலையில் சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் அந்தப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. பல மாவட்டங்களில் மழை நீர் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் சரியாக செய்யப்படவில்லை. இவை வெள்ள ஆபத்துகளை அதிகரித்து விடும்.

சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும் வெள்ளத் தடுப்புப் பணிகளை இரவு பகலாக மேற்கொண்டு அடுத்த சில நாட்களில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கும், மற்ற நீர்நிலைகளுக்கும் கண்காணிப்பு பொறியாளர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் குழுக்களை அமைத்து நிலைமையை கண்காணிக்க ஆணையிட வேண்டும்.

மேலும், சூழலுக்கு ஏற்பட முடிவெடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். வெள்ளத்தைத் தவிர்ப்பதற்கு தேவையான மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ள பாதிப்பும், பிற பாதிப்புகளும் ஏற்படாத வகையில் தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: த(க)ண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்: கரோனாவுக்குப் பின் பேரிடி!

ABOUT THE AUTHOR

...view details