சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் சேகர்பாபு பேசும்போது, சத்தியவாணிமுத்து நகரில் உள்ள குடிசைப்பகுதி மக்கள் மற்றும் சாலை ஓரங்களில் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சென்னை மாநகரில் உள்ள குடிசைப் பகுதிகளில் 14,857 குடும்பங்கள் வசித்து வருகின்றன என்றும், இவர்களில், 10,740 குடும்பங்கள் பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும், சாலையோரம் வசிக்கும் மக்களில் 4 ஆயிரத்து 938 குடும்பங்கள் ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர், சத்தியவாணி முத்து நகர் கூவம் நதிக்கரையில் 2,092 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இவர்களில் 120 குடும்பங்கள் முதலில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், மாணவர்களின் கல்வி காரணமாக வரும் ஏப்ரல் வரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என மக்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இடமாற்றம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மாணவர்கள் இல்லாத மற்றும் படிக்காத மாணவர்கள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில், கடந்த ஐந்தாம் தேதி வரை 590 குடும்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது. இப்படி இடமாற்றம் செய்யப்படும் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், கல்வி நிறுவனங்கள், இடுகாடு, சுடுகாடு மற்றும் இடமாற்ற படியாக ஐந்தாயிரம் ரூபாய், பிழைப்பூதியமாக ஓராண்டிற்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படுவதாகவும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முதலமைச்சரின் இரங்கலும் அறிவிப்பும்!