தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம்: டிஜிபி உத்தரவு - குற்றம்

பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள், லாட்டரி சீட்டுகள் விற்பனையை ஒழிக்க வேண்டும். விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யவும் தமிழ்நாட்டின் அனைத்து காவல் மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.
.

By

Published : Dec 8, 2021, 8:07 AM IST

சென்னை:பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனையை ஒரு மாதத்திற்குள் ஒழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று (டிசம்பர் 7), அனைத்து காவல் மண்டலங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

குண்டர் சட்டத்தில் கைதுசெய்யுங்கள்

அதில், "கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தால், தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவரை 'குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது' செய்து சிறையில் அடைக்க வேண்டும். கஞ்சா, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களைக் கடத்தல், பதுக்கல், கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


காவல் ஆய்வாளருக்கு வாட்ஸ்அப் தகவல்

இது போன்ற 'கஞ்சா, குட்கா, லாட்டரி பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு மனநல ஆலோசகர் மூலம் அவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி ரகசிய தகவல் சேகரித்து விற்பனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் பயிரிடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திரா மாநில காவல் துறையுடன் சிறப்புக் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதைத் தடுப்புப்பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து எஸ்.பி.களுக்கும் சுற்றறிக்கை

ரயில்வே காவல் துறையினர், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா, லாட்டரி கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்த ஒரு மாதத்துடன் இந்த நடவடிக்கையை நின்றுவிடாமல் காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர்களுக்குக் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனைக் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை அளித்துத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பணியினை சென்னை காவல் ஆணையர், கூடுதல் காவல் இயக்குநர் (சட்டம் - ஒழுங்கு) ஆகியோர் தினமும் கண்காணித்து அறிக்கை அனுப்புதல் வேண்டும். மேலும், அனைத்து மாநகர காவல் ஆணையர், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கல்லூரியில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவி: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details