முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
பொதுக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், ”காந்தியின் கொலைக்குக் காரணமான சவாக்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் எனக் கூறுவது இந்த நாட்டிற்கு இழைக்கும் துரோகம். பாஜக, ஆர்.எஸ்.எஸ் சூழ்ச்சிகளை மக்களுக்கு விளக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “எதையும் எளிமையாக மக்களிடம் எடுத்துச் சொல்வதில் சிதம்பரம் வல்லவர். இதனைக் கண்டு பாஜக அஞ்சியது. பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி தோல்விகளை மக்களிடம் எடுத்துரைத்தார். மோடி எல்லாவற்றையும் அரசியல் வாக்குகளாக மாற்ற நினைக்கிறார். இதனை ஒரு போதும் காங்கிரஸ் செய்தது கிடையாது.
கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தன் சொந்த மகளைக் கொலை செய்த ஒரு பெண், சிதம்பரத்திற்கு எதிராக சாட்சி சொல்லுகிறார். இதுபோல் நடந்தது இல்லை. இதை இந்த சமூகம் பார்த்துக் கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த வழக்கு விசாரணையை ஒளிபரப்பினால் சிதம்பரம் ஒத்துழைக்கிறாரா இல்லையா என்பது தெரியும்.
‘கலியுகம் வந்தால் கொலைகாரனுக்கும் மரியாதை வரும்’ என்று ஓர் பழமொழி உள்ளது. அதுபோல் தற்போது ராஜிவ் காந்தி, மகாத்மா காந்தியைக் கொன்றவர்களைப் பாராட்டிப் பேசி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.