சட்டப்பேரவைத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜவஹர், அவரது ஆதரவாளர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, "மத்திய அரசு யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக, எதேச்சதிகாரமாக மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இதை எதிர்த்து தலைநகர் தில்லியில் ஒன்பது மாதங்களாக விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இவர்களைச் சந்தித்து கோரிக்கையைக் கேட்க தயாராக இல்லை. இது மோடியின் சர்வாதிகாரத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிற வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் பேசுகிற பாஜக, உழவர்கள் விரோத கட்சி. உழவர்கள் தங்கள் விளை பொருள்களை இதுவரை தமிழ்நாடு அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்றுவந்தார்கள். ஆனால், புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் அதானி, அம்பானி கையில் ஒப்படைக்கப்படுகிற இடர் ஏற்பட்டிருக்கிறது.
இதை எதிர்த்து ஏற்கனவே மாநிலம் முழுவதும் ஏர்கலப்பைப் பேரணி நடத்தி, காங்கிரஸ் கட்சி விழிப்புணர்வுப் பரப்புரையை மேற்கொண்டிருக்கிறது. மக்கள் பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 644 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.