தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விவசாய மசோதாக்களை எதிர்த்து தேனியில் நாளை காங்கிரஸ் மாநாடு!

சென்னை: விவசாய மசோதாக்களை எதிர்த்து தேனியில் நாளை (அக். 19) காங்கிரஸ் மாநாடு நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

விவசாய மசோதங்களை எதிர்த்து தேனியில் நாளை (அக். 19) காங்கிரஸ் மாநாடு!
விவசாய மசோதங்களை எதிர்த்து தேனியில் நாளை (அக். 19) காங்கிரஸ் மாநாடு!

By

Published : Oct 18, 2020, 8:55 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (அக். 18) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'மத்திய பாஜக அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மாநாட்டை தேனி - போடி சாலையில் நாளை (அக். 19) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நடத்துவதென தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ், தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது.

இந்த மாநாட்டில் நானும் (கே.எஸ். அழகிரி), சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் எனப் பலர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டிற்காக டிராக்டர்கள் அணிவகுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் அனுமதியோடு செய்வதற்கான முயற்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மௌலானா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எம்.பி.முருகேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நாளை (அக். 19) நடைபெறவுள்ள மாநாட்டை முடக்குகிற வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலர் சாய்சரண் தேஜஸ்ரீ பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விவசாயிகள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி தரமுடியாது, டிராக்டர்கள் பங்கேற்க கூடாது என்று விவசாயிகளை காவல் துறையின் மூலம் மிரட்டி அச்சுறுத்துகிறார். இவரது அராஜகப் போக்கு காரணமாக பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

அதிமுக நிறுவிய 49ஆம் ஆண்டு விழாவையொட்டி நேற்று (அக். 17) அதிமுக தேனி மாவட்டச் செயலாளர் சையத் கான் நூற்றுக்கணக்கான கார்களுடன் அணிவகுத்து பயணம் மேற்கொண்டதைத் தடுக்க காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு பொது இடங்களில் அதிமுக கொடி ஏற்றவும், டிஜிட்டல் பேனர்கள் வைக்கவும் அனுமதி வழங்கியிருக்கிறார். இவற்றையெல்லாம் தடுக்காத மாவட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்கேற்கிற கூட்டத்திற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி நடத்தவிடாமல் செய்வதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலர் அதிமுகவுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். அதனால், சாய்சரண் தேஜஸ்ரீ தனது பாரபட்ச போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதிமுகவுக்கு எப்படி விழா கொண்டாட அனுமதி அளித்தாரோ, அதேபோல விவசாயிகள் கூட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸுக்கு அவர் அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அனுமதி அளிக்கத்தவறினால் தடையை மீறி விவசாயிகள் கூட்டம் நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை எச்சரிக்க விரும்புகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...மாபெரும் வெற்றிபெற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா - வாழ்த்து தெரிவித்த மோடி

ABOUT THE AUTHOR

...view details