தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள்: முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து - All Nations physical Challengers Day

சென்னை: அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TN CM wish all nations physical challengers day
TN CM wish all nations physical challengers day

By

Published : Dec 2, 2020, 12:23 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் நலன்களையும் பேணிக் காத்திடும்வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் நாள் 'அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்' அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பெற்று தன்னம்பிக்கையுடன் உயர்ந்திட, அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500/- மாதாந்திர உதவித் தொகை வழங்குதல், கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல்;

மாற்றுத் திறனாளிகளுக்குப் பேருந்துப் பயணச் சலுகை; மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது; பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள்; மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள்; போக்குவரத்து நெரிசல்மிக்க இடங்களில் பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாகச் சாலையினைக் கடப்பதற்கு ஏதுவாக குரல் ஒலிப்பான் சமிக்ஞைகள் நிறுவியது;

மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளின் வாழ்க்கையைச் சிறப்புற அமைக்கும் வகையில் தக்க ஆலோசனைகளை வழங்குவற்கு இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் மாநில ஆதார வள மையம் நிறுவியது போன்ற பல்வேறு நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது.

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும், சமுதாயத்தில் சம உரிமையுடன் வாழ்ந்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல்வேறு நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details