பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். அவரைத் எதிர்த்து திமுக சார்பில் அக்கட்சி பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
முதலமைச்சர் பழனிசாமி வேலூர் பரப்புரை தேதி அறிவிப்பு - தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னை: வேலூர் மக்களவைத் தேர்தல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜூலை 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் பரபப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
![முதலமைச்சர் பழனிசாமி வேலூர் பரப்புரை தேதி அறிவிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3943619-thumbnail-3x2-cm.jpg)
இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இருகட்சியினரும் தீவிரமாக பரப்புரை செய்துவருகின்றனர். சமீபத்தில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்நிலையில், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஜூலை 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இது குறித்த அறிவிப்பை அதிமுக தலைமைக்ககழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி முதலமைச்சர் பழனிசாமி ஜூலை 27 ஆம் தேதி வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளிலும், 28ஆம் தேதி கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம் ஆகிய இடங்களிலும் பரப்புரை செய்கிறார். பின்னர் ஆகஸ்ட் 2ஆம் தேதி அணைக்கட்டு, வேலூர் ஆகிய இடங்களில் பரப்புரை செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.