சென்னை: பல்லாவரம் பகுதியில் உள்ள அருள் முருகன் தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகளிர் சுய உதவி குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவருடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, அதிமுக முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "சுய உதவிக் குழுக்களுக்கு ஜெயலலிதா தான் உயிர் கொடுத்தார். திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் சேவைக் குழு பெண்களுக்கு வங்கி இணைப்பு தொகையாக ரூ.28,000 கோடி மட்டும் தான் கொடுத்தார்கள்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 80 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் தொகை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயக உயர்த்தி தமிழக அரசு வழங்கி வருகிறது. தாய்மார்கள் பிரசவத்தின் போது குழந்தை ஆரோக்கியத்தோடு செல்லக் கூடிய சூழ்நிலையை உருவாகியுள்ளோம்.