தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 7, 2020, 2:30 PM IST

ETV Bharat / city

பணியின்போது உயிரிழந்த காவல் ஆய்வாளரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்

சென்னை: பணியின்போது உயிரிழந்த காவல் ஆய்வாளர் அய்யனமூர்த்தியின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலைய சரகம், பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலை, அரப்பாக்கம் அருகே அமைக்கப்பட்டிருந்த காவல் சோதனைச்சாவடியில், ஆற்காடு நகர் வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் நேற்று (டிச. 06) வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு வேன் இரும்புத் தடுப்பு மீது மோதியதில், தடுப்பின் மறுபுறம் நின்றிருந்த காவலர் அய்யனமூர்த்தி என்பவர் பலத்த காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பணியின்போது உயிரிழந்த காவலர் அய்யனமூர்த்தியை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் காவல் ஆய்வாளர் ஆனந்தன் காயமடைந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு, உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நான் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

பணியின்போது, உயிரிழந்த அய்யனமூர்த்தியின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details