மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஆக்.26) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைகளை தொடர்ந்து அரசு வலுப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Remdesivir, Tocilizumab, Enoxaparin போன்ற உயிர் காக்கும் வீரியம் மிக்க மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
மனிதகுலத்தை கரோனா நோய் தொற்று தாக்குதலிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் மட்டுமே பேருதவியாக இருக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. பல்வேறு நாடுகள் கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்தியாவில் தடுப்பூசியை சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னையை தேர்வு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் முதன்மை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆய்வு 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் மேற்கொள்ளப்படும். இந்த ஆராய்ச்சியை சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சிக் கழகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து மேற்கொள்ளும்.
சென்னையைப் பொறுத்த வரையில் இந்த கோவிஷீல்டு தடுப்பூசி இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்து விடும்.
மேலும், 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலில் உருவாக்கி விடும். இரண்டாம் கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டு வரப்படும். மக்கள் நலன் காக்கும் பணிகள் கரோனா தடுப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:நோ அரியர்... அரியர் வைத்திருந்தால், ஆல் பாஸ் - முதலமைச்சர் அதிரடி!