தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டெல்லியில் பள்ளிக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த முதலமைச்சர்! - Delhi Mayur Vighari

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் டெல்லியில் உள்ள மயூர் விகாரில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.

முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி

By

Published : Nov 12, 2020, 3:43 PM IST

தலைநகர் டெல்லியில் கடந்த 90 ஆண்டுகளாக டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தால் ஏழு இடங்களில் மொழிவாரி சிறுபான்மையின மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இப்பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடமாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இங்கு பயிலும் சுமார் 7,500 மாணாக்கர்களில் 85 சதவிகிதம் தமிழர்கள் ஆவர். இங்கு பயிலும் மாணாக்கர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் தமிழ்ப் பாடப் புத்தகங்களை விலையில்லாமல் வழங்கிவருகிறது.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். பெருகிவரும் தமிழ் மக்களின் எண்ணிக்கையினை கருத்தில்கொண்டு, டெல்லி வளர்ச்சிக் குழுமத்தால், டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்திற்கு மயூர் விகாரில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மயூர் விகாரில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிதியுதவி வேண்டி, தமிழ்நாடு முதலமைச்சரிடம் டெல்லி தமிழ்க் கல்விக் கழகம் கோரிக்கை வைத்தது. அக்கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு அக்.26ஆம் தேதி அன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியிலுள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இப்புதிய பள்ளிக் கட்டடம் 6,515 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் வச்சானி, பள்ளிக் கல்வி ஆணையர் என். வெங்கடேஷ், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன், டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details