சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது காரில் காமராஜர் சாலை விவகானந்தர் இல்லம் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அவர் செல்வதற்காக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது திடீரென்று இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், முதலமைச்சரின் பைலட் காரை மோதுவதுபோல் சென்றுள்ளனர். இதனால் பைலட் காரில் பாதுகாப்புக்காகச் சென்ற உதவி ஆணையர் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த வாகனத்தின் எண்ணை தெரிவித்து, பிடிக்கும்படி கூறியுள்ளார்.
உடனடியாக உழைப்பாளர் சிலையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர், அந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப்பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் எதிர்திசை சாலையில் தப்பிச் சென்றுள்ளனர். நேப்பியர் பாலத்தில் போக்குவரத்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஜெகதீசன் மடக்கும்போது, அவரது கால் மீது இடித்து தப்பிச் சென்று, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மீது மோதி, இரண்டு நபர்களும் கீழே விழுந்துள்ளனர்.