தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'உச்ச நீதிமன்ற கட்டளைகளை அரசு பின்பற்ற வேண்டும்'- மு.க. ஸ்டாலின் அறிக்கை! - கரோனா வைரஸ் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கட்டளை

சென்னை: கரோனா சோதனை செய்யாமல் இந்த நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தானாகவும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு மனப் பக்குவம் இல்லை; அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை பெறவும் அவருக்கு ஜனநாயக ரீதியான எண்ணம் இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், மக்களை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

TN Chief Minister should follow the dictates of the Supreme Court  says Stalin!
TN Chief Minister should follow the dictates of the Supreme Court says Stalin!

By

Published : Jun 23, 2020, 10:22 AM IST

திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கோவிட்-19” கொடிய நோய்த் தொற்றைத் தடுப்பதில் படுதோல்வியடைந்து, கரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்று இயலாமையால் கைவிரித்து நிற்கும் முதலமைச்சர் பழனிசாமி ஜூன் 19ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளையாவது பின்பற்றி, தமிழக மக்களை கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்திட முன்வர வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

நாடு முழுவதும் கோவிட்-19 நோய்க்குச் சிகிச்சை அளிப்பதில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, நோய்க் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையை உறுதி செய்திட மாநிலங்களுக்கு மிக முக்கியமான கட்டளைகளை மேன்மை தங்கிய இந்திய உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்திருப்பது, சமூக அக்கறையுள்ள அனைவராலும் வரவேற்கத்தக்கது.

குறிப்பாக, இந்த வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அ.தி.மு.க. அரசின் பிடியில் சிக்கி - தினமும் பதற்றத்திலும் அச்சத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய தீர்ப்பு அது!

முக்கிய அம்சங்கள்

  1. கோவிட்-19 சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளை ஆய்வு செய்யவும், மேற்பார்வையிடவும், வழிகாட்டவும் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவினை அமைக்க வேண்டும். அக்குழு 7 நாட்களுக்குள் மேற்பார்வைப் பணியினைத் தொடங்கிடத் தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  2. கோவிட்-19 தொற்று நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் சி.சி.டி.வி. கேமிராக்களைப் பொருத்த வேண்டும். சிகிச்சைக் குறைபாடுகளை நீக்க உரிய வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கு- அந்த சி.சி.டி.வி காட்சிகளை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் அளித்திட வேண்டும்.
  3. கரோனா நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோரின் குடும்பத்திலிருந்து விருப்பம் தெரிவிக்கும் ஓர் உறுப்பினர் அந்த மருத்துவமனையில் தனியாக ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
  4. கரோனா நோய்த் தொற்று சிகிச்சையில் இருப்பவரின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து நேரடியாகத் தெரிந்து கொள்ளவும், தொலைபேசி வாயிலாக அறிந்து கொள்ளவும் ஒரு “ஹெல்ப் டெஸ்க்” ஒவ்வொரு கோவிட்-19 மருத்துவமனையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
  5. கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டவரின் உறவினருக்கும், மருத்துவமனைக்கும் பரிசோதனை அறிக்கை (Test Report) கண்டிப்பாக வழங்கிட வேண்டும்.

இந்தக் கட்டளைகள் தவிர, கரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை மாநிலங்கள் செங்குத்தாக மேலும் மேலும் உயர்த்தி அதிகரித்திட வேண்டும் எனவும் பரிசோதனை செய்ய வருவோர் யாரையும், முடியாது என்று திருப்பி அனுப்பக் கூடாது என்றும் 12.6.2020 அன்று பிறப்பித்த கட்டளையை மீண்டும் வலியுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம், அதைக் கண்டிப்பாக மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மனப்பக்குவம் இல்லை

ஜூன் 12ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி, அ.தி.மு.க. அரசு பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பது- அன்றைக்கு 6,32,256-ஆக இருந்த கரோனா பரிசோதனை செங்குத்தாக 12 லட்சத்திற்கு இன்றுவரை உயரவில்லை என்பதிலிருந்தே தெரிகிறது.

உச்சநீதிமன்றத்தின் உயிர் காக்கும் உத்தரவையே, சரியாகப் புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்து, அ.தி.மு.க. அரசு புறக்கணித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கரோனா சோதனை செய்யாமல் இந்த நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தானாகவும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு மனப் பக்குவம் இல்லை; அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை பெறவும் அவருக்கு ஜனநாயக ரீதியான எண்ணம் இல்லை.

வலியுறுத்தல்

எந்தப் பக்கம் இருந்து ஆலோசனைகள் வந்தாலும் அவற்றை அரசியல் என்று மிகச் சாதாரணமாக அலட்சியப்படுத்திவரும் முதலமைச்சர், இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளையாவது ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழக மக்களைக் காப்பாற்ற, அவற்றை முறையாக அணுகி உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் ஊரடங்கை மீறியதாக 17 ஆயிரம் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details