தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்துவதற்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால், காவல் துறையினரின் இந்த செயல் ஜனநாயக விரோதம் எனக் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பினைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், தமிழ்நாடு அரசையும், காவல் துறையினரையும் எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர். மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட அவர்கள் நடைபயணம் மேற்கொள்ள முயன்றனர்.
இதனையடுத்து சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் ராஜூ கூறுகையில், ’ஜனநாயகத்தில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை. அதனை ஏற்க மறுத்து இந்த அரசு போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது பொய் வழக்குகள் தொடர்ந்து சிறைக்கு அனுப்புகிறது. தமிழ்நாடு அரசு இந்தப் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கடைசி தொண்டரின் உயிர் உள்ளவரை கடுமையான போரட்டங்களை முன்னெடுப்போம்’ என்றார்.