தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரத சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் மொத்தம் 45 வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூராக உள்ள பொருட்கள் (பேனா) உள்ளே எடுத்து செல்ல அனுமதியில்லை. பேப்பர், பென்சில் மட்டுமே அனுமதிக்கப்படும். முகவர்களுக்கு தேவையான அனைத்தும் 100 மீட்டர் சுற்றளவில் கிடைக்கும் அளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதைத்தாண்டி வெளியில் செல்லும் முகவர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள், என்றார்.
தேர்தல் ஆணையர் உடன் ஆலோசனைக் கூட்டம்; சத்யபிரத சாகு தகவல்! - sathyapradha sahu
சென்னை: வாக்கு எண்ணும் பணி குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர்களோடு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை ஆலோசனை மேற்கொள்கிறார் என்று, தலைமைத் தேர்தல் அலுவலர் சத்தியபிரத சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் தேர்தல் நடத்தும் அலுவலர், பார்வையாளர் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் தவிர வேறு யாருக்கும் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை. ஒவ்வொரு சுற்றுக்கு பின்னும் முடிவுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 விவிபாட் இயந்திரங்கள் கடைசியாக எண்ணப்படும். வாக்குபதிவு இயந்திரப் பழுது காரணமாக வாக்குகள் எண்ண முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கான விவிபாட் இயந்திரங்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே அலுவலர்கள், முகவர்கள் என அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டு அவரவர்களது இடங்களில் அமரவைக்கப்படுவார்கள். ஒரு மக்களவைத் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதி இருக்குமாயின், அந்த 6 தொகுதிக்கான வாக்குகளும் ஒன்றாக சேர்த்து மொத்தமாக எண்ணப்படும். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி குறித்து தமிழகம் உட்பட 10 மாநில தலைமைத் தேர்தல் அலுவலர்களோடு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். காணொலி காட்சி மூலமாக நாளை காலை 11.30 மணிக்கு இந்த ஆலோசணை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் மற்றும் காவல்துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர், என்றனர்.