சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி, கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) ஜெயந்த் முரளி, கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் வே.ராஜாராமன், காவல் துறை ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ராஜீவ் குமார், வெங்கட்ராமன், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும், அதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், பதற்றமான ஆறாயிரம் வாக்குச்சாவடிகள், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தற்போது கரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தவும், முகக் கவசம் அணியாதவர்களை கண்காணிக்கக் கூடிய வகையிலும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள், விழாக் கூட்டங்கள் உள்ளிட்ட பிற கூட்டங்களிலும் முகக் கவசங்கள் அணியாமல் பொதுமக்கள் கலந்துகொண்டால் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எந்தவித பொது நிகழ்ச்சிக்கும் கூட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கும்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனுமதி வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்துள்ளது.