2020-21 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பொதுவாகவே மாநில பட்ஜெட் என்பது நிதி நிலையை விளக்கும் ஆவணமாக அல்லாமல் அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் பிரசாரமாகவே இருக்கும். இந்த பட்ஜெட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்காது.
மோசமான நிதி நிலை:
தற்போதைய சூழலில் அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. அரசின் கடன் சுமையும், நிதிப் பற்றாக்குறையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதே சமயத்தில் புதிய வருவாய் எதுமில்லாமல் உள்ளது. 2019- 2020 நிதியாண்டில் அரசின் ஒட்டுமொத்த கடன் சுமை சுமார் ரூ.4 லட்சம் கோடி (சரியாக ரூ.3,97,496) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ. 14,315 கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை ரூ.44,176 கோடியாகவும் இருக்கும் என கடந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசின் ஜிடிபி கடனுக்குமான விதிகம் 23 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கணிப்புகளை விட அதிகமாக கடன், வருவாய் பற்றாக்குறை இருக்கும் என கூறப்படுகிறது.
மத்திய அரசு நிதி:
மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியை பெற போராட வேண்டிய நிலை உள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக தமிழ்நாடு அரசுக்கு சேர வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகிறது. ஆனால் மத்திய அரசும் நெருக்கடியை சந்தித்து வருவதால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நிதிக்குழு பங்கீடு:
தமிழ்நாட்டிற்கு உள்ள மற்றொரு பிரச்னை நிதிக்குழு பங்கீடு. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எவ்வளவு நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும், அதனை மாநிலங்களுக்குள் எவ்வாறு பகிர வேண்டும் என தீர்மானிக்கும் அமைப்பாக நிதிக்குழு உள்ளது. 2020- 2021 நிதியாண்டுக்கான 15ஆவது நிதிக்குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதில் உள்ள அளவீடுகள் மக்கள் தொகை குறைவாக உள்ள, அதிக வளர்ச்சி கண்டுள்ள மாநிலங்களுக்கு, குறிப்பாக தென் மாநிலங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிதிக்குழு பங்கீட்டு விதிமுறைகளால் தமிழ்நாட்டிற்கு ரூ. 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என பொருளாதார பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
பொருளாதார மந்த நிலையால் மத்திய அரசின் வரி வசூலும் குறைந்து வருவதால் அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நிதியின் அளவு மேலும் குறையும். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு இந்த பட்ஜெட்டில் எவ்வாறு நிதி ஆதாரங்களை திரட்டப்போகிறது என்பதை கவனிக்க வேண்டும்.