சென்னை: இந்து கடவுள்களை ஆபாசமாகச் சித்தரித்துவரும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில பாஜக தலைவர் எல். முருகன் தலைமையிலான பாஜகவினர் சென்னை கோயம்பேட்டில் உள்ள முருகன் இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முருகன், “தமிழ்க் கடவுள் முருகனை மிகவும் ஆபாசமாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் சித்தரித்துள்ளது. மக்கள் பலரும் கடவுள் முருகனுக்காகப் பாத யாத்திரை மேற்கொண்டு வாரக்கணக்கில் நடந்துசென்று தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு கடவுளைத் தவறாகச் சித்தரித்த அந்தச் சேனலைத் தடை செய்யக் கோரியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் அவரவர் இல்லங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறோம்.
கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலைச் சேர்ந்த நிர்வாகி கைது!
மேலும், இதுபோன்று தமிழ்க் கடவுள்களைத் தவறாகச் சித்தரிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை என்றால் காவிக் கூட்டம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும். அந்தச் சேனலின் தொகுப்பாளர் சுரேந்திரன் ஒரு சமூக விரோதி. அவரைக் குண்டர் சட்டம், தேசிய விரோதச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று மாலை ஒருவரைக் கைது செய்துள்ளார்கள். முக்கியமான நபரை இன்னும் கைது செய்யவில்லை. அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். கண்டிப்பாகச் சுரேந்திரனுக்கு பின்புலம் இருக்கிறது. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் பேட்டி மேலும் தமிழ்நாட்டில் பல கோயில்களில் அர்ச்சனை மந்திரங்கள் தமிழில் சொல்லப்பட்டுவருகிறது. அனைத்துக் கோயில்களிலும் தமிழில் சொல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கமும்” என்றார்.