சென்னை: நாட்டின் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலோ, பொது அமைதியைக் குலைக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு மதத்திற்கு எதிராகக் கருத்துகளைப் பேசும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தக் காணொலியை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்துவரும் சௌதாமணி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தைரியமா? விடியலுக்கா?
மேலும், அந்தக் காணொலியைப் பகிர்ந்திருந்த சௌதாமணி 'தைரியமா? விடியலுக்கா?' என்றும் கருத்துப் பதிவிட்டிருந்தார். அவரது இந்த நடவடிக்கைக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
மேலும், அந்தக் காணொலி மதக்கலவரத்தைத் தூண்டுவதாக இருப்பதாகவும், இதனைப் பகிர்ந்த சௌதாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் பிணைக் கோரி மனு தாக்கல்செய்திருந்தார்.
2 பிரிவுகளின்கீழ் வழக்கு
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு இன்று (பிப்ரவரி 9) விசாரணைக்கு வந்தபோது காவல் துறைத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், சௌதாமணி மீதான புகார் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதாகவும், விசாரணையில் சௌதாமணி பதிவிட்ட காணொலியால் மதக்கலவரம் தூண்டப்படும் என்பதை காவல் துறையினர் உறுதிசெய்தனர் என்றும் வாதிட்டார்.
அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, சௌதாமணி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அந்த வழக்கை எதிர்த்து வேண்டுமென்றால் புதிய மனுவைத் தாக்கல் செய்துகொள்ளலாம் என்றார். மேலும், தற்போது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சௌதாமணி தாக்கல்செய்த முன்பிணை மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவு