தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 13 (சனிக்கிழமை), 14 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாள்கள் தவிர்த்து, வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று நேற்று மதியம் 3 மணியுடன் (மார்ச் 19) நிறைவு பெற்றது.
இதையடுத்து தமிழ்நாடுசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்து 637 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 23 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பாளர்கள் அளிக்கும் வேட்புமனு விண்ணப்பம், சொத்துப்பட்டியல் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவர்களால் நிராகரிக்கப்படும். இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் தேர்தலில் போட்டியிட தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர் வரிசைப்படுத்தப்படும். இதன் பின்னர் வேட்புமனு ஏற்கப்படும்.